Friday 3rd of May 2024 04:43:22 AM GMT

LANGUAGE - TAMIL
.
சஜித் அணியினரின் சந்தர்ப்பவாதம் சக தலைமைகளையும் காலைவாரும்! - அஸாத் ஸாலி எச்சரிக்கை!

சஜித் அணியினரின் சந்தர்ப்பவாதம் சக தலைமைகளையும் காலைவாரும்! - அஸாத் ஸாலி எச்சரிக்கை!


"தேசிய காங்கிரஸ் தலைவரின் நாடாளுமன்ற உடை தொடர்பில், சந்தர்ப்பம் பார்த்துக் கூச்சலிட்டதால், சிலரின் இனவாத உளக் கிடக்கைகளை உலகம் அறிந்துகொள்ள முடிந்துள்ளது."

- இவ்வாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்தார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி, ஆடையணிந்து வந்தார் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் மீது எதிர்க்கணைகள் தொடுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள், சபாநாயகரின் அனுமதியுடன் மீண்டும் அதே உடுப்புடன் அதாவுல்லா நாடாளுமன்றம் வந்து அமர்ந்ததில், பல படிப்பினைகள் உள்ளதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"தேசிய காங்கிரஸ் தலைவரின் ஆடையைப் பார்த்து "அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ்., இஸ்லாமிய அடிப்படைவாதி" எனக் கூச்சலிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள், அரசியல் நோக்கிலே செயற்பட்டுள்ளனர். அதாவுல்லாவின் ஆடையில் அடிப்படைவாதம், பயங்கரவாதச் சாயல் இருந்திருந்தால், மீண்டும் அந்த ஆடையுடன் சபைக்கு வருவதற்கு சபாநாயகரின் அனுமதி கிடைத்திருக்காது. நடைமுறையில் சில தவறுகள் இருந்ததாலே அவர் வௌியேற்றப்பட்டு, மீண்டும் சபைக்குள் அனுமதிக்கப்பட்டார். இதைக் கூடப் பொறுத்துக்கொள்ளும் மனவளர்ச்சி சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு இல்லாமல் போனமை கவலையளிக்கின்றது.

ஒரு தவறைக் கண்டிப்பதற்கு எம்.பிக்களுக்கு உரிமை உள்ளதுதான். எனினும், எதிர்க்கட்சி எம்.பிக்கள், அதாவுல்லாவுக்கு எதிராகப் பிரயோகித்த சொற்கணைகள், வங்குரோத்து அரசியலுக்கு வயிறு வளர்க்கும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன்.

சிறுபான்மைச் சமூகங்களைப் பெருந்தேசியத்தின் எதிரிகளாகக் காட்டி, ராஜபக்ஷக்கள் வெற்றியடைந்த வியூகத்தை, தற்போது வங்குரோத்திலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் கையிலெடுத்துள்ளது.

முஸ்லிம் தனித்துவ தலைமைகளும், எம்.பிக்களும் இணைந்து, பயங்கரவாதச் சாயலுக்கு பக்கவாத்தியம் ஊதியதுதான் இதிலுள்ள மிகப் பெரிய கவலை. ஒரு காலத்தில் இவர்களையும் ஒதுக்கிவிட்டு, ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற சஜித் தலைமையிலான அணி முயற்சிக்கலாம். மேலும், சந்தர்ப்பம் பார்த்து இத் தலைமைகளுக்கும் சஜித் அணி, பயங்கரவாதச் சாயம் பூசாது என்பதற்கு எவ்வித உத்தரவாதங்களும் இல்லை. இதைத்தான் எதிர்க்கட்சியினரின் கூக்குரல்களும் குற்றச்சாட்டுக்களும் தௌிவுபடுத்துகின்றன.

எனவே, ஆளும் தரப்பால் ஒதுக்கி, தனிமைப்படுத்தப்படுள்ள முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள், இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கத்தைக் கைவிட்டு, சமூக நோக்கில் செயற்படுவதுதான், அரசியலுக்காக எமது சமூகத்தை ஒதுக்கும் தரங்கெட்ட அரசியலை இல்லாதொழிக்க வழிசமைக்கும்" - என்றுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE